வேலை தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல்! நெதர்லாந்து தூதரகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சில தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருவதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சிலர் ஏற்கனவே இத்தகைய மோசடிகளுக்கு இரையாகியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு
நெதர்லாந்து குடிவரவு சேவையினால் வழங்கப்பட்டவை போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதங்களும் தற்போது புழக்கத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில விசேட சந்தர்ப்பங்களைத் தவிர, அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் நெதர்லாந்து விசா வழங்குவதில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர் திறன் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் சில உண்மையான வேலைவாய்ப்புகள் காணப்படக்கூடும் எனவும், ஏனைய பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் போலியானவையாக இருக்கலாம் எனவும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
எச்சரிக்கை
மேலும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தூதரகம் எந்தவிதமான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பல்வேறு தரப்பினரால் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பில் பணம் செலுத்துவது உள்ளிட்ட எந்தவொரு நிதி ஒப்பந்தத்திலும் ஈடுபடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உண்மைத்தன்மையை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் இலங்கையின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் உடனடியாக முறைப்பாடு செய்து தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் நெதர்லாந்து தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.