சிறைச்சாலை மோதலை கலவரமாக்கிய அரசியல் சதி: விசாரணைகளில் திகைக்க வைக்கும் தகவல்கள்...
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது பயங்கரமான அரசியல் சாதித்திட்டம் என்பது ஆரம்ப நிலை விவாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தை தூண்ட சிங்கள தேசியவாதத்தை தூக்கி பிடித்துக் கொண்டு அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சி சம்பந்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது. ஏனெனில், இவை இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவை மேலதிக விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதான விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவங்களின் பின்னணியிலுள்ள தகவல்கள்,
இரு அதிகாரிகளின் நேரடித் தலையீடு
இந்த கலவரத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளின் நேரடித் தலையீடு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரால் இது குறித்த விபரங்கள் அமைச்சருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது அதிகாரியான ஜெயிலர் 2016 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு சிறையிலிருந்த, தற்போது எதிர்க்கட்சியின் முக்கிய கட்சியொன்றின் முக்கிய பதவி வகிக்கும் அரசியல்வாதி ஒருவருக்கு சிறைக்குள் பணிவிடை செய்தவராவார்.
பின்னர் இவருக்கு பதவியுயர்வும் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை உணவு வரிசைக்கு அருகில், முதல் நாள் மோதலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை எந்தவொரு காரணமும் இன்றி கன்னத்தில் அறைந்துள்ளார்.
முதல் நாள் இரவு தணிந்திருந்த பதற்றத்தை, திட்டமிட்ட சதியின் அடிப்படையில் மீண்டும் தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்தார் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.
இதையடுத்தே சிறைச்சாலை விசேட படையினர் (பந்த பொலிஸ்) மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்ன் உடனேயே, அந்த அதிகாரி சிறைச்சாலையை விட்டு வெளியேறி, தனது குடும்பத்தினருடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது.

சிறைச்சாலை விசேட படையினர் (பந்த பொலிஸ்) இந்த பிரிவு கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் ஓய்வுப் பெற்ற முப்படையினரை கொண்டு அமைக்கப்பட்டதாகும்.
இவர்கள் தான் சிறைச்சாலைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபடுபவர்கள். 15 அதிகாரிகளை கொண்ட குறித்த பந்த பொலிஸின் கட்டளை அதிகாரி குழுவை இரு பிரிவுகளாகப் பிரித்து சிறைச்சாலை உள்ளே செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
"இந்த நேரத்தில் உள்ளே அனுப்புவது பைத்தியக்காரத்தனம், எங்களை வானத்தை நோக்கி சுட அனுமதியுங்கள்" என ஏனைய அதிகாரிகள் கோரிய போதிலும், இவர் அதற்கு அனுமதி மறுத்துள்ளார்.
அப்போது வானத்தை நோக்கிச் சுட்டிருந்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கக்கூடிய வாய்ப்பை இவர் தவிர்த்துள்ளார்.
இறுதியில் அந்த இளம் அதிகாரிகளை மரணத்தின் விளிம்பிற்குள் தள்ளிவிட்டு இவர் வெளியே வந்து தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று, ஆடைகளை மாற்றி வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு வெளியே நின்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டமைப்பின் வீழ்ச்சியும் அரசியல் சதியும்
இந்த இரு காரணிகளுடன் இதன் பின்னணியில் பாரிய அரசியல் சதி உள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது. தற்போது பல அரச நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்க செயலாற்றி வருவதைக் காண முடிகிறது.

சிறைச்சாலைத் திணைக்களமும் அதில் ஒன்றாகும். தற்போதைய நீதி அமைச்சர் தீர்க்கமான அல்லது சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் ஒருவர் அல்ல என்பதால், சிறைச்சாலை கட்டமைப்பு இன்னும் அங்குள்ள சில ஊழல் அதிகாரிகளின் விருப்பப்படியே இயங்குகிறது. சிறைச்சாலைத் துறை இன்னும் அரசியல் சாக்கடையாகவே காணப்படுகிறது.