வவுனியா - நெடுங்கேணி பாதையை விட்டு விலகும் பாலங்கள்: மக்கள் குற்றச்சாட்டு
வவுனியா - நெடுங்கேணி ஒதியமலை வீதியில் உள்ள பாலங்கள் பலவும் வீதியுடன் இருக்கும் இணைப்பில் இருந்து விலகிச் செல்லும் தோற்றப்பாட்டை காட்டுமளவுக்கு சேதமடைந்துள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த வருடம் ஏற்பட்டிருந்த மாரி மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீரில் அரிப்புக்குள்ளாகிய பாலத்தின் பகுதிகள் சில இடங்களில் அச்சம் தரும் வகையில் சேதமடைந்துள்ளன.
மக்கள் கோரிக்கை
இதுவரையும் அவை சீர் செய்யப்படுவதற்கான விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்படாது இருக்கின்றன.
தரையமைப்பு மற்றும் நீரோட்டளவு போன்றனவற்றை கருத்தில் எடுத்து வீதியமைப்பின் போது செயற்பட்டிருந்தால் அந்தளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என அப்பகுதி வாழ் மக்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பாலத்திற்கு அருகில் வீதியுடன் இணையும் பகுதிகளில் பாரியளவான குழிகள் தோன்றியுள்ளன.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொருத்தமான பயணிகள் பாதுகாப்புச் செயற்பாடுகளையாவது சேதமடைந்துள்ள பகுதிகளில் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.