கொங்கோ ஜனநாயகக் குடியரசில் சுரங்கங்கள் சரிந்து விழுந்ததில் சுமார் 200 பேர் பலி
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பெய்த கனமழை காரணமாக, ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் விமான இயந்திரங்களைத் தயாரிக்கப் பயன்படும் கோல்டன் (Coltan) கனிமம் எடுக்கப்படும் சுரங்கங்கள் சரிந்து விழுந்ததில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு கொங்கோவின் ருபாயா (Rubaya) பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள், சிறுவர்கள் மற்றும் சந்தைக்கு வந்த பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல உடல்கள் இன்னும் சேற்றுக்குள் புதைந்து கிடக்கின்றன.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு 30 மைல் தொலைவில் உள்ள கோமா (Goma) நகரின் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சுரங்கங்கள் அனைத்தும் கைகளால் தோண்டப்பட்டவை.
பாாதுகாப்பற்ற நிலை..
முறையான பராமரிப்பு அல்லது பாதுகாப்பு கட்டமைப்புகள் அங்கு இல்லை. ஒரு சுரங்கக் குழியில் மட்டும் சுமார் 500 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.

சுரங்கப் பாதைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இருப்பதால், ஒரு பகுதி இடிந்தால் அது மற்ற சுரங்கங்களையும் சேர்த்து இழுத்துக் கொள்கிறது. இந்தச் சுரங்கங்கள் தற்போது M23 என்ற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களால் நியமிக்கப்பட்ட பேச்சாளர், கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கொங்கோவில் உள்ள ஒழுங்குமுறைப்படுத்தப்படாத சுரங்கங்களில் 4 வயதுக் சிறுவர்கள் கூட பணிபுரிவதாக ஸ்கை நியூஸ் (Sky News) கண்டறிந்துள்ளது.
கொங்கோ அரசப் படைகளுக்கும், ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 போன்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே பல தசாப்தங்களாக மோதல் நீடித்து வருகிறது. 2024 மே மாதம் ருபாயா பகுதியை M23 குழுவினர் தங்கள் வசப்படுத்தினர்.