நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது!
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம்
இதன்படி, திடீர் வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பத்து மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையினால் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 1,141 பேர் தங்கள் உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
இயற்கை அனர்த்தங்களினால் மொத்தம் 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
மேலும் உயிரிழப்பு, காயம் அல்லது காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
அதிகூடிய மழைவீழ்ச்சியான 149.5 மில்லிமீட்டர், அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேசத்தில் பதிவாகியுள்ள அதேவேளை குறைந்தளவான மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் 77.5 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது.