நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் அதனோடு இணைந்த கைது நடவடிக்கையும் (Photos)
நாடளாவிய ரீதியில் பல குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதோடு சந்தேகநபர்களையும் கைது செய்து வருகின்றனர்.
காலிமுகத்துவாரப் பகுதி
காலிமுகத்துவாரப் பகுதியில் நேற்றிரவு (17.3.23) 69 லட்சத்து 49 ஆயிரத்து ஐநூறு ரூபா பணத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸாரின் சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியிலிருந்து கோட்டை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியை வீதி சோதனை சாவடியில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தி சோதனையிட்ட போது சாரதி இருக்கைக்கு அருகில் துணிப் பையொன்றில் பெருமளவிலான நாணயத் தாள்கள் இருப்பதைக் கண்டு சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் போது சாரதி தான் ஒரு மீன் வியாபாரி என்றும் மீன் விற்பனை செய்த பணமே அது என்றும் தெரிவித்துள்ளார் எனினும் பொலிஸார் அவரை கீழிறக்கி லொறியை மீண்டும் ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்போது, சாரதி பயந்து, மற்றொரு நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த தொகையில் 5 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, தன்னை விடுவிக்கும்படி, பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்போது அவர் மேல் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனையடுத்து, லொறியை பொலிஸ் நிலையம் கொண்டு வந்த பின்னர், பொலிஸ் மோப்ப நாய் கொண்டு லொறி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்போது சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பயணித்த லொறியின் இருக்கைக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் 3 கிராம் 340 மில்லிகிராம் எடையைக் கொண்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு, கல்பொட பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அநுராதபுரம்
பொலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள குளமொன்றின் நீர்ப்பாசித் தாவரங்களுக்குள் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் பல மணிநேர முயற்சியின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம்- மிஹிந்தலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த இளைஞன் இன்று (18.3.2023) மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வழக்கு ஒன்றின் இலக்கத்தை அறிந்து கொள்வதற்காக வந்துள்ளார்.
அப்போதுதான் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ள விபரம் அவருக்குத் தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த இளைஞர் பொலிஸ் நிலையத்துக்கு வௌியில் உடனடியாக ஓடிவந்துள்ளார்.
பொலிஸாரும் அவரை விடாமல் துரத்திக் கொண்டு ஓடிச்சென்றுள்ளனர். அதனையடுத்து நேரே வீதிக்கு ஓடிவந்த இளைஞர், மிஹிந்தலை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏரியில் குதித்து தப்பிச் சென்றுள்ள முயன்றுள்ளார்.
பின்னர், உடனடியாக அவ்விடத்துக்கு வந்த மிஹிந்தலை பொலிஸார், பல மணித்தியாலங்களின் பின்னர் பெரும் முயற்சியை மேற்கொண்டு ஏரியின் பாசிக்குள் மறைந்திருந்த சந்தேக நபரைப் பிடித்து கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை இன்றையதினம் (18.3.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் 22,24,26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் வட்டுக்கோட்டை,சங்கானை,நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில், கழுத்தில் கத்தியை வைத்து நகைகள் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது தொலைபேசி மற்றும் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது அவர்களுக்கு எதிராக பல குற்றச்செயல் வழக்குகள் உள்ளதாக அறிய முடிகிறது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மானிப்பாய்
மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று (18.03.23) கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.
இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும்
வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி
வெவ்வேறு பகுதிகளில் இட்ட ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிஸார் கைது
செய்ததோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார்
சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.