தேசிய கல்வி கல்லூரி, ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர்கள் தொழிற்சங்க போராட்டம்
தேசிய கல்வியியற் கல்லூரிகளை இணைத்து ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அங்கீகார பத்திரத்தினை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தொழிற்சங்கம் சனிக்கிழமை(02) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு கடிதம் மூலம் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமா கல்வியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் கலாசாலைகளிலும் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், இரண்டாம் வருடப் பயிற்சி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நிகழ்நிலை வகுப்புக்கள் நிகழ்நிலை கணிப்பீடுகள் நிகழ்நிலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் நடைபெறவில்லை.
அத்துடன், மூன்றாம் வருட மாணவர்களின் கணிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ளல், பரீட்சை, புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தல், கணிப்பீடு தொடர்பான உரிய நிறுவனங்களுடனான பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுபிட்சமான எதிர்கால நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தாதியர் கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகங்கள் இரண்டினை ஸ்தாபிப்பதற்காக 1978ஆம் ஆண்டு 16 ஆம் இலக்கமுடைய பல்கலைக்கழக சட்ட மூலத்தைத் திருத்தி முன்னாள் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் 2020 /12 /14 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்து அனுமதியைப் பெற்றவுடன் விசேட நோக்கங்களுக்கான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது.
இந்த முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி பத்திரத்தை இப்போது நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் இந்தச் செயன்முறையினை தடுப்பதற்காகக் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் உபாலி சேதர மீண்டும் தலையிட்டுள்ளதாக தெரிகின்றது. தற்போது கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இந் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தி பல கடிதங்கள் எங்களுடைய தொழிற்சங்கத்தினால் தற்போதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல் எங்களுடைய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பீடாதிபதிகளுக்கும் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குச் சந்தர்ப்பத்தினை பெற்றுத் தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 2020/ 09 /15ஆம் திகதி முற்பகல் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதாகக் கூறி பீடாதிபதிகள் சில மணித்தியாலங்கள் நிகழ்நிலை தொடர்புடன் வைத்திருந்து இறுதியில் அந்த கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டது.
பின்னர் கல்வி அமைச்சர், கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர், அந்த அமைச்சின் இராஜாங்க செயலாளர் உட்பட ஒரு குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளமை எங்களுக்கு அறியக்கூடியதாக இருந்தது. கல்வியியற் கல்லூரிகளின் முன்னோடிகளான பீடாதிபதிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் சகல கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விரிவுரையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்காது ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட விதம் தெளிவாகின்றது.
மேன்மை தங்கிய ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தை மாற்றத்திற்குள்ளாக்கி கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளினதும் விரிவுரையாளர்களினதும் கருத்துக்களுக்கு இடமளிக்காது இதுவரை கல்வியியற் கல்லூரிகளில் பண்புத்தர தொடர்பாகக் கவனம் செலுத்தாத தேசிய கல்வி நிறுவகத்தில் பொறுப்புதாரியின் கருத்திற்கமைய மாத்திரம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்வதுடன் 2020 / 03 / 11 ஆம் திகதியிலிருந்து நாம் இதுதொடர்பான எங்கள் உறுதியான நிலைப்பாட்டை அந்தந்த காலத்திற்குக் கல்வி அமைச்சராக பணியாற்றிய டலஸ் அழகப்பெரும அவர்களுக்கும், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுக்கும் அறிவித்துள்ளோம்.
கல்வி அமைச்சராக இருந்த ஜீ.எல்.பீரிஸ், எங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அனுமதியைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வரை எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வோம் என்பதனை தயவாக அறியத்தருகின்றோம் என்று இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரம், கல்வியியல் கல்லூரிகள் 19 னையும் இணைத்து ஆசிரிய கல்வி பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கு எதிராக இருக்கின்ற கல்விச் சீர்திருத்த அமைச்சின் இராஜாங்க செயலாளர் உள்ளடங்கலாகக் குழுவினருக்கு எதிர்ப்பை தெரிவித்து ஊடக கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை வெளிக்காட்டல், அந்தந்த கல்வியியற் கல்லூரிகளை மையமாகக்கொண்டு பிரதேச ரீதியாக ஆசிரிய பயிலுனர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியோரை இணைத்து எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளல், கல்வியமைச்சு முன்னால் உண்ணாவிரதம் இருத்தல், போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.