தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள்
ஜனாதிபதியினால் 29ஆம் திகதி தொடக்கம் ஜுன் 05ஆம் திகதி வரையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இருதயபுரம் இருதய ஆண்டவர் ஆலய வின்சன்ட் டி போல் பாலர் பாடசாலையும் இணைந்து நடத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வும் சிறுவர் சந்தை நிகழ்வும் இன்று நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சதா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இருதயபுரம் இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வின்சன்ட் டி போல் பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் பணிப்புரை
பொலித்தின் பாவனையற்ற அழகிய எதிர்காலத்தினை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் இந்த உலக சுற்றாடல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல், மீள்உருவாக்கம், நகர்ப்புற சூழலை சுத்தப்படுத்தல், சிரமதான நிகழ்வுகள், மர நடுகை என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இதன்கீழ் சிறுவர்கள் மத்தியில் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் ஆபத்துகளையும் இயற்கையினை நேசிக்கும் தலைமுறையினை உருவாக்கும் நோக்குடனும் இயற்கை பொருட்களைக்கொண்ட சிறுவர் சந்தையொன்று ஏற்பாடுசெய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சிறுவர் சந்தை
இந்த சிறுவர் சந்தையில் இயற்கையாக எமது சூழலில் கிடைக்கும் மரக்கறிகள் மற்றும் பழவகைகள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது சிறுவர்களினால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகரசபையிடம் கையளிப்பதற்காக சிறுவர்களினால் உதவி பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிளாஸ்டிகினால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் இதன்போது விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



