ஹட்டன் பேருந்து விபத்துக்கான காரணங்களை வெளியிட்ட அரச வாகன ஆய்வாளர்
ஹட்டன் (Hatton) மல்லியப்பு பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பேருந்து விபத்துக்கான காரணங்களை நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் இன்று (23) வெளியிட்டுள்ளார்
இதில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கடுமையான பாதுகாப்பு மீறல்கள் இருந்ததை அவர் கண்டறிந்துள்ளார்.
சாரதியின் ஆசனப்பட்டி
சாரதியின் பக்கமுள்ள கதவில் ஏற்பட்ட ஒரு செயலிழந்த பூட்டு காரணமாக கதவு திடீரென திறக்கப்பட்டது இதனால் ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அத்துடன் சம்பவ நேரத்தில் ஓட்டுநர் ஆசனப்பட்டியை அணிந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது
தலைமை மோட்டார் வாகன ஆய்வாளரின் கூற்றுப்படி, கதவின் பூட்டு சிறிது காலமாக பழுதடைந்திருந்ததால், அந்தக்கதவை மூடி வைக்க தற்காலிக நடவடிக்கைகளை பேருந்தின் உரிமையாளர் எடுத்திருந்தார்.
ஆசனங்கள் பாதுகாப்பு தரநிலைகளின்படி நிறுவப்படவில்லை
அதேநேரம் விபத்தின் போது பயணிகளுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டமைக்கு, பேருந்தில் மேலதிமாக பொருத்தப்பட்டிருந்த உலோகப் பொருட்களும் அங்கீகரிக்கப்படாத ஆபரணங்களும் காரணமாக இருந்துள்ளன.
பேருந்தின் ஆசனங்கள் பாதுகாப்பு தரநிலைகளின்படி நிறுவப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 50 பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |