முன்னாள் ஆளுநர் நஸீர் அஹமட் தனி கட்சியில் களமிறங்க தீர்மானம்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரது சொந்தக் கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணி சார்பில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் பதவிகளை வகித்த நஸீர் அஹமட், கிழக்கு மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அவர் ஜனநாயக ஐக்கிய முன்னணி எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்றையும் வைத்துக் கொண்டுள்ளார்.
கறைபடியாத அரசியல்வாதிகள்
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துமாகப் போட்டியிட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் கறைபடியாத அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்ட, செயற்திறன் மிக்க அரசியல்வாதிகள் பலரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில அரசியல்வாதிகளும் தமது கட்சியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள போதும், பொதுமக்களின் அதிருப்திக்குள்ளான, நாட்டின் நலனைப் பாதிக்கும் வகையில் கடந்த கால செயற்பாடுகளைக் கொண்ட எந்தவொரு அரசியல்வாதிக்கும் தமது கட்சியில் இடமளிக்கப்படாது என்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் இஸட்.ஏ.ஹிதாயத்துல்லா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |