போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் பாடசாலை மாணவர்கள்! இராதாகிருஷ்ணன் (video)
நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கும் சில நாடுகள் முயற்சிக்கின்றன.
எனவே, போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணயின் தலைவர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பொகவந்தலாவ சர்வதேச சாலம் முன்பள்ளி பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
" போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் இன்று பாடசாலை மாணவர்களும் சிக்கி, போதைக்கு அடிமையாகி வருவது வேதனையளிக்கின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் விழிப்பாகவே இருக்க வேண்டும்.
ஆசிரியர்களும் கல்விக்கு அப்பால், மாணவர்களின் நலன்கள், ஒழுக்கம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமண வீடு, பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பெற்றோர் சகிதம் பிள்ளைகளும் செல்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் பிள்ளைகளுக்கு பரீட்சாத்தமாக போதைப்பொருள் வழங்கப்படுகின்றது.பின்னர் நிலைமை மோசமாகின்றது.
எனவே, நிகழ்வுகளுக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் பெற்றோர் அவர்கள் மீது கழுகுப்பார்வையை செலுத்தினால் நல்லது. நாட்டில் நாளாந்தம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.
பின்னணியில் செயற்படுவது யார்?
இதன் பின்னணியில் செயற்படுவது யார்? பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. பாதுகாப்பு பலமாக உள்ளது என பாதுகாப்பு தரப்பும் கூறுகின்றது. அப்படியானால் நாட்டுக்குள் போதைப்பொருள் வருவது எப்படி?
இலங்கையானது ஒரு தீவு. காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தால் இதற்கு முடிவு கட்டலாம். மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிகாலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கு
சில நாடுகள் முற்படலாம். அவ்வாறான சூழ்ச்சிகளுக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.