நானுஓயா எரிபொருள் பௌசர் விபத்து! குடிநீரின்றி தவிக்கும் மக்கள்
நானுஓயா பகுதியில் கடந்த 14ஆம் திகதி எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இதன்படி, நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டிய, சமர்செட், நானுஓயா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் இயங்கும் தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல், கிரிமிட்டி கீழ் பிரிவு போன்ற தோட்டங்களில் வாழும் மக்கள் இவ்வாறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
எரிபொருள் கசிவு..
எரிபொருள் பௌசர் விபத்திற்குள்ளானதால் ஏற்பட்ட எரிபொருள் கசிவு குடிநீருடன் கலந்துள்ள நிலையில் அதனை பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி இரவு முதல் இன்று(16) வரை மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று புதன்கிழமை(14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிகமான எரிபொருள் கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த நீரோடையில் கலந்தது.
இதன் காரணமாக தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல் , கிரிமிட்டி கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் நீர்தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரில் அதிக அளவு எரிபொருள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் குறித்து நீர்தொட்டியில் இருந்து வெளியேறும் நீரினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீர்தொட்டியில் இருந்து நீர் வெளியேறும் குடிநீர் குழாய்கள் முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு தற்போது தேவைக்கேற்ப தோட்ட நிர்வாகத்தினர் மூலமாக வெளிப்பிரதேசங்களில் இருந்து சுத்தமான குடிநீர் பெளசர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
விபத்து நடந்த நாளில் இரவு நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அதிக அளவு எரிபொருள் கசிந்து சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் குறித்த பகுதிகளில் உள்ள நீரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என நீர் மாதிரிகள் சேகரித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து ஏற்பட்ட இடத்தில் அதிக எரிபொருள் கசிவு ஏற்பட்டு வீதி வழுக்கும் தன்மை உள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
