தமிழ்நாட்டில் மாணவன் மீது வாள்வெட்டு: பின்னணியில் சாதிய விரோதம்
தமிழ்நாட்டின் நாங்குநேரியில் 17 வயதுடைய மாணவர் மற்றும் அவரது தங்கை வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் வேதனையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இன்று(11.08.2023) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், தமிழ்நாட்டில் சாதிரீதியான விரோதம் காரணமாக 17 வயதுடைய மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் நேற்று(10.08.2023) வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம்
இச்சம்பவமானது தமிழ்நாட்டின் - நாங்குநேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய மாணவர்கள் 4 பேர் மற்றும் 17 வயதுக்கு குறைவான 2 மாணவர்கள் உற்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில்,
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக காணப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.
சட்டம் அதன் கடமையைச் செய்யும்
குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக… https://t.co/IA7oclHIYT
— M.K.Stalin (@mkstalin) August 11, 2023
குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.