தமிழக பாஜக தலைவர் பதவி! - இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட பெயர்
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி பெயர்தான் முதலில் பரிந்துரைக்கப்பட்டதாகவும், இறுதி நேரத்தில் தான் அண்ணாமலை பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் கட்சியில் சேர்ந்ததுமே துணை தலைவர் பதவி தரப்பட்டது. அப்போதே பல சீனியர்கள் சலசலத்தனர். ஆதங்கத்தில் பொருமினார்கள்.. மனவருத்தத்திலும் இருந்தனர்.
அதன்பிறகு, பாஜகவில் அவர் இணைந்த 11 மாதத்திலேயே அவருக்கு தமிழக தலைவராக மிகப்பெரிய பதவி கிடைத்திருக்கிறது.
இல.கணேசன்
இதனால் கட்சியின் சீனியர்கள் மறுபடியும் அப்செட் ஆகி உள்ளனர். குறிப்பாக, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாநில பொறுப்புகளில் உள்ள பலரையும் தேசிய தலைமைக்கு எதிராக முணுமுணுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலைக்கு வாழ்த்துகளை எச். ராஜா சொல்லியிருந்தாலும், அது வஞ்சப்புகழ்ச்சி அணி என்கிறார்கள்.
நியமனம்
அண்ணாமலையின் நியமனத்தை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லையாம்... கட்சியின் அமைப்பு செயலாளராக இருக்கும் கேசவவிநாயகத்தை தலைவராக்கலாம் என ஆலோசனை நடந்திருக்கிறது.
அவர் மீது சில விரும்பத்தகாத புகார்கள் இருப்பதை தேசிய தலைமை கவனத்தில் எடுத்துக் கொண்டதால் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
முயற்சி
அதுபோலவே, நயினார் நாகேந்திரன், வானதி இருவருமே சில முயற்சிகளை சட்டமன்ற பாஜக தலைவராக நயினார் இருப்பதால் அவரது பெயரும் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், வானதியின் பெயர் லிஸ்ட்டில் இருந்துள்ளது. இதற்கு காரணம், அவர் எம்எல்ஏவாக இருந்தாலும்கூட, தமிழக அரசியலை நன்கு அறிந்தவர், வழக்கறிஞர்.. தெளிவாக விவாதம் செய்பவர்.
அரசியலில் சீனியர். தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்.. என்ற அளவுகோல்களை கொண்டு வானதிக்கு இந்த பதவியை வழங்க யோசித்துள்ளனர்.
பெண்கள்
அதுமட்டுமல்ல, தமிழக அரசியலில் கட்சி தலைமைப் பொறுப்பில் பெண்கள் யாரும் இல்லாத சூழலையும் கருத்தில் கொண்டும் வானதி பெயர் பலமாகவே பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பெண் தலைவரின் தலையீடுதான் என்றும் கூறப்படுகிறது.
அதனால்தான், கடைசி நேரத்தில் வானதியை தவிர்த்துவிட்டு, 50 வயதுக்கு கீழே இருக்கும் இளைஞராகவும் புதிய முகமாகவும் ஒருவரை கொண்டு வரலாம் என்ற முடிவில் அண்ணாமலையை டிக் அடித்ததாம் தேசிய தலைமை.
மகேந்திரன்
அதை விட முக்கியமாக, கோவையைச் சேர்ந்த மகேந்திரன் நேற்று முறைப்படி திமுகவில் இணைந்து விட்டார். இவரை வைத்து கொங்கு மண்டலத்தில் கொம்பு சீவி விட திமுக ஆயத்தமாகி வருகிறது.
எனவே கொங்கு மண்டலத்தில் நமது ஆதரவாளர்களை மகேந்திரனிடம் பறி கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவே அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரான அண்ணாமலையை தலைவராக்க பாஜக திட்டமிட்டதாகவும் ஒரு தகவல் சொல்கிறது.
you may like this video...