பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் மற்றும் நாமல் இரங்கல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகைக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றது.
நாமல் எம்.பி. இரங்கல்
"கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு எனது இரங்கலைத் தெரிவித்ததில் நான் பெருமை கொள்கின்றேன்.
Honored to visit to the Apostolic Nunciature in Colombo to express my condolences on the passing of His Holiness Pope Francis. His unwavering compassion, humility, and commitment to social justice profoundly impacted millions around the world. pic.twitter.com/TT1FxZAFJb
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 26, 2025
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இரக்கம், பணிவு மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியன உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆழமாகப் பாதித்தன." - என்று நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய
இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
