இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதாகவும், அதனால்தான் அவர்களை குறிவைப்பதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வருகைத் தந்திருத்த சட்டத்தரணி மனோஜ் கமகே நீதிமன்ற வாயிலில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இந்த அரசாங்கம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அவற்றை திசைதிருப்ப எண்ணுகின்றது. ரெட் லேபல்ஸ் உடன் 300 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
அரசியல் நாடகம்
அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க எண்ணுகின்றது. எனினும், மக்கள் பிரச்சனைகளுடன் வாழ்கின்றனர் என்பதை நாம் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
நாட்டில் அரசி விலை குறைக்கப்பட வேண்டும், தேங்காய் விலை குறைக்கப்பட வேண்டும், மக்களின் வாழ்க்கை செலவு குறைக்கப்பட வேண்டும் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.
இவற்றை மறந்து விட்டு அரசியல் நாடகங்களை நடத்த முயற்சிக்க வேண்டாம். அரசாங்கத்தால் ராஜபக்சர்கள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |