எயார்பஸ் ஊழல் வழக்கில் நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை.. நீதிமன்றில் சிஐடி அறிவிப்பு
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (14) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம், இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நாமல் ராஜபக்ச தலா 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழ் இதுவரை விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு கோட்டை நீதிபதிகள் நீதிமன்றத்தில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan