பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் வலம் வரும் அலங்காரக் கந்தன்(Video)
அழகிய முருகன், அலங்கார வடிவில், தமிழ் கடவுளாக, தமிழர்கள் வாழும் வட பகுதியில், நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புண்ணிய ஸ்தலம். முருக அடியார்கள் பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட அற்புத திருத்தலமும் ஆகும்.
வடபகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் திருப்பதி. முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில், தமிழ் மன்னனின் தலைநகரென்று சிறப்பைப் பெற்றது இந்த நல்லூர். யாழ். ஆண்ட அரசர்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் திருத்தலமாக அமைந்த பெருமை நல்லூர் கந்தசாமி திருக்கோவிலுக்குண்டு. நல்லூர் என்ற பெயரிலே நன்மையும் நலனும் பொழிவும் நிறைந்துள்ளதான கருத்தும் உண்டு.
தமிழர் அடையாளச் சின்னம்
அதன் வளமான வரலாறு, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன், இந்த கோவில் தொலைதூரத்திலிருந்து பக்தர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.
இது இலங்கைத் தமிழ் சமூகத்தின் நீடித்த பக்திக்கு சான்றாக விளங்குவதுடன் ஆன்மீக உத்வேகத்திற்கும் கலாச்சாரப் பெருமைக்கும் தொடர்ந்தும் ஆதாரமாக விளங்குகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. கோவில் நிர்வாகம், அதன் நேரம் தவறாமை, ஒழுங்கு மற்றும் நேர்த்திக்கு பெயர் பெற்றது. மற்ற சைவ கோவில்களுக்கு முன்மாதிரியாக இது அமைகிறது.
ஒளிவீசும் கந்தன்
கோவிலின் மீது தங்களின் ஆழ்ந்த பயபக்தியையும், அபிமானத்தையும் வெளிப்படுத்தும் வகையில், மதச் சடங்குகளுக்கு பக்தர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வருடாந்த உற்சவம் கொடியேற்றம் எனப்படும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தொடர் யாகங்கள், அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் அடங்கும்.
நல்லூர் திருவிழாவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக்காட்சி. முருகன் என்றால் அழகன். கதிர்காமக் கந்தனை ஒளிவீசும் கந்தன் என்றும் காவல் கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை - அன்னதானக் கந்தன் என்றும் அழைப்பதுபோல் நல்லூரானை அலங்காரக் கந்தன் என்று முருகபக்தர்கள் அழைக்கின்றார்கள்.
நல்லூர் கந்தசாமி கோவிலில் திருவிழா என்றால், யாழ்நகரில் மட்டுமல்ல, முருக அடியார்கள் அனைவரது உள்ளங்களிலும் உற்சாகம்தான். இலங்கையில் தென்பகுதியிலே, கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து வட பகுதியிலுள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேறுவது ஒரு சிறப்பாகும்.
மஞ்சம், திருக்கார்த்திகை, கைலாசவாஹனம், வேள்விமானம், தண்டாயுதேபனி, சப்பரம், தேர் திருவிழா ஊர்வலம், தீர்த்தம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படும் சில முக்கிய மத விழாக்களில் அடங்கும்.
தேர் திருவிழாவா நவநாகரீகமாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. சண்முகர் மற்றும் அவரது துணைவியரின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் சிம்மாசனம் எனப்படும் வெள்ளி சிம்மாசனத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.
பக்தர்கள் ஒன்று கூடி, தோளோடு தோள் நின்று, பிரமாண்டமான தேரை வீதிகள் வழியாக இழுத்து, முருகன் மீது தங்களின் நேர்மையையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறார்கள்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ 23ஆம் திருவிழாவான சப்பரத் திருவிழா இன்றைய தினம் மாலை இடம்பெற்று வருகின்றது.
சப்பரத் திருவிழா
இந்த நிலையில் இன்றையதினம் நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா நடைபெற்று வருகின்றது. நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
நாளைய தினம் புதன்கிழமை காலை 07 மணிக்கு தேர் திருவிழாவும் மறுநாள் வியாழக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளன.
இன்றைய சப்பரத் திருவிழாவில், வள்ளி, தெய்வானை சமேதராய் இடப வாகனத்தில் அமர்ந்து நல்லூரான் சப்பரத்தில் வீதியுலா வந்து அருள் காட்சியளித்து வருகின்றார்.
நல்லூர் கந்தனின் சப்பரம் 250 வருடங்களுக்கு மேல் பழமையானது. முன்னொரு காலம் நல்லை கந்தனுக்கு சப்பைரதம் உருவாக்க எண்ணிய போது சிவலிங்கசெட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்பெருமானுக்கு பெரிய சப்பைரதம் தேவையா என வினாவினார்.
அன்று அவரது கனவில் வேல்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது ழுழுத் தோற்றத்தை அவருக்கு காண்பித்தார். இதன் மூலமே நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பைரதமானது முருகப்பெருமானுடைய அருளுடன் மிகப்பிரமாண்டமாக அமைந்தது என்று வழித்தோன்றல் கதையொன்றும் உண்டு.
அதேசமயம், கடந்த வருடத்தை விட இந்த வருடம் நல்லூரான் சப்பரத்தில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதிதாக சிவலிங்கம் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்...