நாட்டில் எரிபொருள் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அமைச்சர் நளிந்தவின் அவசர அறிவிப்பு
நாட்டில் தேவையானளவுக்கு எரிபொருள் இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது வரிசைகளில் நிற்கவோ வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (01.10.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச் சந்தையில் அதிகரிக்கும் முழுமையான செலவு சுமையை நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மீது உடனடியாகச் சுமத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த நிவாரண சலுகையானது பெற்றோல் பயன்பாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது.
நிவாரணம் வழங்கல்
பொதுப் போக்குவரத்து மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான டீசலுக்கு மட்டுமே வழங்கப்படும். கடந்த காலங்களில் உலகச் சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும்கூட்டுத்தாபனமும் இணைந்து சுமார் 57 பில்லியன் ரூபாவை நிவாரணமாக வழங்கியுள்ளன.

இதன்மூலம் கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டின் எரிபொருள் நிவாரணத்திற்காக மட்டும் திறைசேரியினால் மொத்தம் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டதற்கான காரணம்
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டில் எரிபொருள் விலைகள் பெருமளவில் உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்ட போதிலும், எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், நாட்டில் தேவையானளவுக்கு எரிபொருள் இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது வரிசைகளில் நிற்கவோ வேண்டிய அவசியமில்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதாந்தச் சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் உரிய விலை மாற்றங்கள் மற்றும் நிவாரண விகிதங்களைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்றார்.