யாழ்.நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், விவசாய நிலங்களையும் ஏனைய தாவரங்கள் வளரும் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளதாகத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
குறித்த தாவரத்தின் சாதக, பாதகங்கள் தொடர்பில் ஆய்வு செய்து வழங்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இத்தாவரத்தின் சிறிய விதைகள் காற்று, நீர் மற்றும் விலங்குகள் ஊடாக இலகுவாகப் பரவக்கூடியவை. குறிப்பாக, விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத கைவிடப்பட்ட நிலங்களில் அடர்த்தியான புதர்களாக வளரக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது.
மேலாண்மை நடவடிக்கை
இதேவேளை, மண் அரிப்பைக் குறைத்தல், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல் மற்றும் ஆழமான மண் அடுக்குகளிலிருந்து ஊட்டச்சத்துகளை மேல் மண்ணுக்குக் கொண்டுவருதல் போன்ற நன்மைகளும் இத்தாவரத்துக்கு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதன் மண்வள மேம்பாட்டுப் பண்புகளை விவசாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், கட்டுப்பாடற்ற பரவலைத் தடுப்பதற்கும் முறையான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.