மியன்மார் இராணுவத்தின் சதிப்புரட்சியை ஏற்கவில்லை! - வெளிவிவகார அமைச்சு
மியன்மாரில், அந்நாட்டு இராணுவம் மேற்கொண்டுள்ள சதிப்புரட்சியை ஏற்கவில்லை என இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டிக் மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, மியன்மார் வெளி விவகார அமைச்சரிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டிற்கு அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்ததாக ஜயனாத் கொலம்பே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாநாடு ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் இலங்கை இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொண்டது என அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.