16 வயது ஆண்கள் பிரிவில் வடக்கில் தங்கம் வென்றது முத்தையன்கட்டு இடதுகரை தமிழ் வித்தியாலயம்
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த மாகண மட்டப் போட்டிகளில் முத்தையன் கட்டு இடதுகரை பாடசாலையின் சார்பாக அந்த பாடசாலையின் மாணவன் செல்வன் ஜெ.விதுசன் (ஜெயகாந்தன் விதுசன்) கலந்து கொண்டு விளையாடினார்.
விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் பாடசாலையின் மாணவரிடையே இந்த வெற்றி மென்மேலும் ஊக்கமளிப்பதாக விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
யார் இந்த ஜெ.விதுசன்?
தரம் 10இல் தன் கல்வியை தொடரும் விதுசன் எதிர்காலத்தில் வைத்தியராக வரும் விருப்பத்தை கொண்டுள்ள மாணவன். சிறு வயது முதலே விளையாட்டில் அதீத ஈடுபாட்டைக் காட்டி வருகின்றார்.
பிரதேச மட்டங்களில் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் சார்பாகவும் தொடர்ந்து விளையாட்டுக்களில் பங்கெடுத்து வருகிறார். தொடர் வெற்றிகளால் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற விதுசன் வறுமையில் வாடும் இலங்கையின் குடும்பங்களில் ஒன்றை சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
படிப்பையும் விளையாட்டையும் சமமாக கொண்டு செல்வதில் விதுசனுக்கு அவரது பாடசாலைச் சமூகமும் கிராம சூழலும் துணையாக இருப்பதை அவதானிக்கலாம்.
ஜெ.விதுசனின் அம்மா இப்படி சொல்கிறார்
விதுசன் விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்த ஈடுபாட்டைக் கொண்டவன். தங்களால் முடிந்தளவுக்கு ஆதரவளித்து அவனது திறமைகளை வெளிக் கொண்டு வந்து வெற்றி பெற எல்லா வழிகளிலும் முயல்வதாக குறிப்பிட்டார்.
மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக விதுசனை அனுப்புவதற்காக தன்
காதுத்தோட்டை அடகு வைத்து அனுப்பியதாக கூறி தங்கள் இயலுமையினளவை
எடுத்துரைத்திருந்தார்.
தந்தை காவலாளியாக பணியாற்றுவதால் குறைந்தளவு மாத வருமானத்தைக் கொண்டே வாழ முடிகிறது என்றும் மேலும் குறிப்பிட்டார்.
யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos)
வலயமட்டப் போட்டிகள்
துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை முத்தையன்கட்டு இடது கரை தமிழ் வித்தியாலயம். வலய மட்டப் போட்டிகள் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
400m, 800m ஆகிய இரு போட்டிகளிலும் 16 வயது ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு விளையாடிய விதுசன் இரண்டு போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சஹ்ரான் தொடர்பில் ஹக்கீமிற்கு தகவல் வழங்கிய நாட்டின் முதல் பெண்மணி! திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட அதிகாரி
மாகாண மட்டப் போட்டிகள்
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
16 வயது ஆண்கள் பிரிவில் 800m ஓட்டத்தில் முதலாம் இடத்தினையும் 400m ஓட்டத்தில் நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார் விதுசன்.
தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள தெரிவானதனால் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் மேலும் கூறினார்.
தனக்கான பயிற்சி ஆசிரியர் பொறுப்போடு தமக்கேற்ற வகையில் பயிற்சியளிப்பதால் வெற்றி பெறலாம் என நம்பிக்கையும் வெளியிட்டார்.