தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மணிவண்ணன் எதிர்ப்பு
முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான ஒரு கசப்பான உண்மை என தமிழ் மக்கள் கூட்டணியினுடைய உப செயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று(16.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுடைய உரிமைக் குரல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலங்களில் மலையக கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், தமிழ் மக்களுடைய உரிமை கோரிக்கைகளை ஏற்று அங்கீகரித்து தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்திற்கு வலுவான சக்திகளாக இருப்பார்கள் என்றால் அதுவொரு வரவேற்கத்தக்க முற்போக்கான விடயமாக இருக்கும்.

ஆனால் இவர்களுடைய நோக்கம் தேர்தலை கணக்கிட்டு உருவாக்கப்பட்ட கூட்டாக இருக்கும் என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாக தான் எதிர்காலத்தில் அமையும்.
இந்த கூட்டணி நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களுடைய உரிமைக் குரலாக காணப்படும் என்றால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை
வடக்கு - கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த விடயம் தொடர்பில் மணிவண்ணனிடம் வினவிய போது,
இந்தக் கூட்டு அவசியமற்ற கூட்டு என்று நான் திட்டவட்டமாக சொல்ல மாட்டேன். ஏனெனில் சிறுபான்மையினர் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பது கட்டாய தேவை.
இதனை விமர்சித்து, இந்த கூட்டு அரசியல் நோக்கத்திற்குத் தேவையில்லை என்று நான் விமர்சிக்க தயாராக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான கூட்டுக்கள் சிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் பலமடைவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். ஆனால் இந்த கட்சிகளுடைய கடந்த காலம் எங்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது.

மலையக கட்சிகளாக இருக்கலாம், முஸ்லிம் கட்சிகளாக இருக்கலாம், எப்பொழுதுமே ஆளும் பக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அமைச்சுப் பதவிகளுக்காக தங்களை நளினப்படுத்திக் கொண்டு செயற்பட்ட கட்சிகள் ஆகும்.
ஆகவே மலைய கட்சிகளாக இருந்தாலும் முஸ்லிம் கட்சிகளாக இருந்தாலும் கடந்த கால செயற்பாடுகளுக்கும் ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல் போக்குக்கும் ஒத்துப் போகாத தன்மை அல்லது முரண்பாடான தன்மை கடந்த காலங்களிலிருந்து இருந்தது.
தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியை தென்னிலங்கையில் தாக்கு பிடிக்க முடியாத காரணத்தினால் இவ்வாறான கூட்டு உருவாக்கப்படுகின்றது என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாகத்தான் இருக்கும்.
எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மக்களுடைய அரசியல் பலத்தை கூட்டுவதற்கான ஒரு அடிப்படை மனச்சாட்சியுடன் கூடிய ஒரு கூட்டாக இருந்தால் நன்மையளிக்கும் என்றார்.
தவிசாளர் பதவி நீக்கம்
உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி என்ற வகையிலும் அரசியல்வாதி என்ற வகையிலும் அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் வினவிய போது,
“குறிப்பாக கிஷோரினுடைய விவகாரத்திலே எல்லை தாண்டி தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்திருக்கிறாரோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.
ஏனெனில் ஆளுநர் உடைய கருத்தை விமர்சிப்பதற்கு உள்ளூர் ஆட்சி மன்ற உறுப்பினருக்கு உரிமை இல்லை என்றால் வேறு எவருக்கு விமர்சிக்க முடியும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

ஆகவே ஆளுநருடைய தலையீடு என்பது சர்வாதிகாரியாக சித்தரிக்கின்ற போக்காகத்தான் பார்க்க முடிகிறது. இதற்கான கடிவாளங்கள் இடப்பட வேண்டும்.
ஆனால் ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளுநருடைய அதிகாரம் என்பது உள்ளூர் ஆட்சி மன்றங்களினுடைய ஆங்கிலத்தில் மிஸ் மேனேஜ்மென்ட் என்று சொல்லக்கூடிய பிறள் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமாகவே இருக்கிறது.
அந்த வகையில் பிரயோகிக்கப்பட வேண்டுமே ஒழிய உள்ளூராட்சி மன்றங்களின் உடைய சுயாதீனத்தில் அல்லது உள்ளூராட்சி மன்றத்தினுடைய உறுப்பினர் ஒருவருடைய கருத்துச் சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற அளவிற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது என்னுடைய கருத்தாக உள்ளது“ என பதிலளித்துள்ளார்.