நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள்
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெடெனிற்கும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட்லெகூன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூஎல்எம்என் முபீன் தலைமையிலான முஸ்லிம் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது இங்கு கருத்து தெரிவித்த முஸ்லிம் பிரதிநிதிகள்,
நியூசிலாந்து கிறிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் மற்றும் பல்பொருள் அங்காடி கத்திக்குத்து தாக்குதலின் போது நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும், நியூசிலாந்து மக்களும் நடந்து கொண்ட அதியுச்ச நாகரீகமான நடத்தைக்கு இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்ததுடன், தற்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள்,ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,இச்செயலணிக்கு கடும்போக்குவாத ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையினையும் அவர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு செய்த அநீதிகளையும் விளக்கப்படுத்தியதுடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலும்,சகல மக்களின் சம உரிமையை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் நியூசிலாந்து அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்படி விடயங்களை கேட்டறிந்து கொண்ட உயர்ஸ்தானிகர் இவ்விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் அன்ட்ரோவ் டெவெலரும் கலந்து கொண்டதுடன்,முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் ஏறாவூர் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் நாஸர்,சட்டத்தரணி முனீர் மற்றும் வாழைச்சேனை கனீபா ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri