பொதுபல சேனாவின் உருவாக்கத்தில் கோட்டாபய பின்னணியில் இருந்தாரா? டிலந்த விதானகே விளக்கம்
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மறைமுக தொடா்புகள் இருப்பதாக பொதுபல சேனாவின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாாி டிலந்த விதானகே சந்தேகம் வெளியிட்டுள்ளாா்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதல்களில் பொதுபல சேனா அமைப்புக்கு தொடர்பில்லை என்று அவா் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும், அப்போதிருந்த சில அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளாா்.
பொதுபலசேனாவின் எழுச்சிக்கு அன்றைய ராஜபக்ச ஆட்சியினரும் சில அமைச்சர்களும் அஞ்சினார்கள்.
எனவே சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி, பொதுபல சேனாவின் மீது பழியைச் சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தொடா்புபடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவே, பொதுபல சேனாவை உருவாக்கினார் என்று சிலர் கருதினா்.
இது உண்மையற்ற விடயம் என்று டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளாா். ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இல்லையெனில் அவரை செயலணி ஒன்றின் தலைவராக , ஜனாதிபதி நியமிக்கமாட்டார். எனினும் பொதுபல சேனாவை நிறுவுவதில் கோட்டாபய பின்னால் இருக்கவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுவதாக டிலந்த தொிவித்தாா்.
பொதுபலசேனாவிற்கு எங்கிருந்து நிதி கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளித்த, விதானகே, சில தனிப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டாா்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், குறிப்பாக தென் கொரியாவில் உள்ளவர்கள் பொதுபல சேனாவிற்கு நிதி உதவி வழங்கியதாகவும் அவர் கூறினார்.
