கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்:பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மூன்று பேரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொது மக்களின் உதவி கோரியுள்ளனர்.
சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள 8 பேர்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவை நகரில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ள 8 நபர்களை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபர்களான 8 பேரின் புகைப்படங்களை பொலிஸார்
பகிரங்கப்படுத்தியுள்ளனர். இந்த நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால், கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112514217 (பணிப்பாளர்) அல்லது 0718592868 (உதவிப் பணிப்பாளர்) ஆகியவற்றுடன் தொடர்புக்கொண்டு தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 35 பேர் கைது
மேற்படி கொலை சம்பவம் தொடர்பாக அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஏற்கனவே 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானோர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே 9 வன்முறையில் கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களில் போது, நிட்டம்புவை நகர் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, நகரில் இருந்த போராட்டகாரர்களால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
தப்பியோடிய அவரை துரத்திச் சென்ற நபர்கள் அவர் உட்பட மூன்று பேரை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.