லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்
கடந்த வருடம் லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது 11 முறை அவரது தலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே மரணத்திற்கு காரணமாகியுள்ளதென தெரியவந்துள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லறையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையரின் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஞ்சித் என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தனது படிப்பை மேற்கொள்வதற்கும், தனது குடும்பத்திற்கு உதவுவதற்கும் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் இரக்க குணமுடைய ரஞ்சத்தின் மரணத்திற்கு சீக்கிரம் நீதி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என குடும்பத்தினரும் நண்பர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
அன்றையதினம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.