சுவிற்சர்லாந்து பேர்னில் பல்சமய பேராளர் மாநாடு (Photos)
சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தால் பன்னாட்டு பல்சமய அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இரு நாள் பல்சமயப் பேராளர் மாநாடு நடைபெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்சமய அமைப்புக்களும், சமய விஞ்ஞான கற்கைப் பேராசிரியர்களும் பங்கெடுக்கும் இம்மாநாடு 19.05.2022 பேர்ன் பல்சமய இல்லத்தில் அமைந்துள்ள ஞானலிங்கேச்சுரர் சைவத்திருக்கோவில், மசூதி, தேவாலாயம், பௌத்த விகாரை, அலெவித்தென் தர்க்கா ஆகிய வழிபாட்டு இடங்களை பயிலுரையுடன் சுற்றிக்காட்டும் நிகழ்வுடன் காலை 10.00 மணிக்குத் தொடங்கப்பெற்றது.
பல்சமய இல்லத்தின் இளையோர் பணிப்பொறுப்பாரள் லூயிஸ் கிறாப் பயிற்றுரையினை வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கேட்போர் கூடத்தில் வரவேற்பினை பேராசிரியர் பிறிக்கிற்றா றொத்தாக் ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து பல்சமய இல்லத்தின் இயக்குநர் முனைவர் காறின் மிக்கிற்யுக் சிறப்புரை ஆற்றி பல்சமய இல்லத்தின் பணிகளை விளக்கினார்.
எட்டுச் சமயங்கள் ஒன்றாக வாழும் ஐரோப்பாத்திடல் பல்பண்பாட்டு பல்சமய இல்லமாக விளங்குவதுடன், இணக்கம் புரிதல் வளர்க்கும் இடமாகவும் விளங்குவதாக மகிழ்ச்சி வெளியிட்டார்.
இந்நிகழ்விற்கு பேர்ன் மாநிலத்தின் உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர் எவி அலெமான் தலைமை விருந்தினராகப் பங்கெடுத்து வாழ்த்தினை நவின்றார்.
ஐரோப்பியக் கண்டத்தின் நடுவில் பேர்ன் மாநிலத்தில் எண்சமயங்களின் கூட்டுப்பணியில் ஓர் இல்லம் அமைந்திருப்பது பேர்ன் மாநிலத்திற்குச் சிறப்பு எனவும், இன்று நடைபெறும் பன்னாட்டுப் பல்சமயப் பேராளர் மாநாடு ஒவ்வொரு சமய அமைப்பின் பட்டறிவு பிற அமைப்புகளுக்குக் கிடைக்கச் செய்வதுடன், எதிர்காலத்தில் மேன்மேலும் இணக்கத்துடன் சமூகப் பொதுப்பணிகள் செம்மையாக ஆற்ற அடிப்படையை ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
பல்சமய இல்லத்தின் பதில் தலைவர் பொறுப்பினை கடந்த ஆண்டு முதல் பேர்ன் சைவநெறிக்கூடம் ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் பல்சமய இல்லத்தின் பெயரால் மாநாட்டு உரையினை தில்லையம்பலம் சிவகீர்த்தி இவ்வாறு ஆற்றினார்.
இப்பல்சமய இல்லத்தில் பல்சமயப் பல்பண்பாட்டு உரையாடல் நிறைவாக நடைபெறுகின்றன, இவை ஒரு இயங்கு செயல்முறை ஆகும். பன்னாட்டுச் சமய மற்றும் சமயவிஞ்ஞான துறைசார் தக்கோர்களிடையில் பல்சமய இல்லம் நாம் ஏற்படுத்தும் இணைப்பு பிற சமயப் பண்பாட்டினைக் கற்றுணர்வதுடன் எமது சமயத்தினையும் மதிப்புடன் ஒழுக வழிசெய்யும்.
வேறுபாடுகள் களையப்பெற்று சமூக இணக்க வாழ்வினை இலகுபடுத்தவும் இவ்வாறான தொடர்பாடல்கள் வழிசெய்யும் என நாம் நம்புகின்றோம். இப் பல்சமய இல்லம் அருங்காட்சியகம் கிடையாது, இது வாழப்படும் இல்லம் ஆகும்.
வேற்றுமைகள் கடந்து நன்மதிப்புடன் ஒருவரை ஒருவர் மதித்து உரையாடி எதிர் எதிர்ப் புரிதலை வளர்ப்போம் அதற்கு சைவநெறி கூடமாகிய நாமும் எமது பங்கினை அளிப்போம் என அவரது உரை அமைந்தது.
இந்த உரைகளைத் தொடர்ந்து இரு பயிலரங்குகள் நடைபெற்றன. இப் பல்சமய இல்லம் கட்டப்படும்போது ஏற்பட்ட அனுபவத்தினை கட்டடக்கலை தகையாளர் மார்க்கோ றித்தெர் பயிலரங்காக நடாத்தினார்.
வழிபாட்டுச் சமய இல்லங்கள் கட்டும்போது ஏற்படும் கட்டுமான மற்றும் சட்டச்சிக்கல், சமய அமைப்பினர் எதிர்பார்க்கும் தன்மை, அதனை அப்படியே கட்டுவதில் இருக்கும் சிக்கல்கள் என்பன இப்பயிலரங்கின் உட்பொருளாக இருந்தது.
முன்னாள் பல்சமய இல்லத்தின் தலைவி முனைவர் கெரட்டா ஹவுக் எண் சமயங்களையும் இணைத்து பல்சமய இல்லம் இயங்கும் பட்டறிவினை பயிலரங்காக நடாத்தினார். நண்பகல் உணவு வணக்கம் உணவகத்தில் சைவத் தமிழ் உணவாக அன்னத்துடன் சைவக்கறிகள் வழங்கி நடைபெற்றது.
எதிரொளி எனும் தலைப்பில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் முனைவர் கெர்டா ஹவுக் பங்கெடுக்கும் சைவசித்தாந்த வாதம் யேர்மன் மொழியில் நடைபெற்றது. "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்" எனும் பொருள் வாதக்கருவாக கொள்ளப்பட்டதுடன்,20.05.2022ம் நாளும் பிற தலைப்புக்களில் நிகழ்வு தொடர உள்ளது.