நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.
அந்த நேரத்தில், மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அம்பாறை மாவட்டம்
அந்தவகையில், தமிழினப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான இன்றையதினம் (13.05.2024) அம்பாறை (Ampara) மாவட்டம் காரைதீவு பொதுச்சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வு பூர்மாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) காரைதீவு பிரதேசக் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறி அனுஷ்டிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
செய்தி - நவோஜ்
வவுனியா மாவட்டம்
முள்ளிவாய்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), திருநாவற்குளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
செய்தி - திலீபன்
யாழ்ப்பாண மாவட்டம்
அத்துடன், யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண நகர பழக்கடைக்கு முன்னால் உள்ள வைரவர் கோவிலடியில் நடைபெற்றுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் தலைவி இளங்கோதை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆகியோர் கலந்துகொண்டு கஞ்சியை சமைத்து அங்குள்ளவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
செய்தி - கஜிந்தன் மற்றும் தீபன்
வட்டுக்கோட்டை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இடம்பெற்றுள்ளது.
குறித்த கஞ்சி விநியோக நிகழ்வு, இன்று காலை 10
மணியளவில் மானிப்பாய் அமைந்துள்ள பொதுச் சந்தையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பொழுது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
நினைவேந்தல் ஊர்தி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் ஊர்தி வடமராட்சியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
குறித்த ஊர்தி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாக வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்குச் சென்றடைந்துள்ளது.
அத்துடன், பருத்தித்துறையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு சுடரேற்றப்பட்டு மலர் தூவி நினைவு கூறப்பட்டுள்ளது.
செய்தி - எரிமலை
தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |