19 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி! செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றையதினம்(14.08.2025) வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 அன்று முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் 53 பாடசாலை மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
அக வணக்கம்
இந்நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
19 ஆண்டுகள் கடந்தும், இந்த சம்பவத்துக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இடைக்கட்டு சந்தி
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் அனுஷ்டிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
செய்தி - சன்
யாழ். பல்கலைக்கழகம்
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இன்று(14) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
இதன்போது, கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
செய்தி - ராகேஷ்
யாழ்ப்பாணம் மாநகர சபை
செஞ்சோலையில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சின்போது பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளின் 19ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் ஓகஸ்ட் மாத அமர்வு இன்று மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
செய்தி - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













