வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளிலும் மனித புதைகுழிகளா - துரைராசா ரவிகரன் பகிரங்கம்(Video)
வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (12.07.2023) முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே து.ரவிகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வருகின்ற நிலைமையில், இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள், சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உடலங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும், குறித்த செயற்பாடு சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இடம் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் புதைகுழிகள்
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,
"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள் இவர்களுக்கான முடிவினை பதிலினை எவரும் வழங்கவில்லை.
இறுதி போரின்போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சில பேருந்துக்களில கொண்டு செல்லப்பட்டு கொக்குத்தொடுவாய் மத்தியில் புதைத்திருக்கலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கின்றது.
வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு பகுதிகளில் புதைகுழிகள் இருக்கலாமோ என்றசந்தேகம் எழுந்துள்ளது.
இவற்றுக்கான பதிலினை இந்த அரசங்கம் சொல்லவேண்டும் அல்லது இவர்களை சொல்ல வைக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்றால் இந்த பிள்ளைகளை ஒப்படையுங்கள்.
இங்கு மனிதபுதைகுழியினை மட்டும் புதைக்கவில்லை உண்மையினை புதைக்கின்றார்கள்
நீதியினை புதைக்கின்றார்கள் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக நாங்கள் ஒன்றும்
செய்யமுடியாதஅளவில் மிரட்டுகின்றார்கள் போராட்டங்களில் பங்குகொள்ளமுடியாதவாறு
புலனாய்வாளர்கள்.
சுற்றிநின்று படம் எடுப்பது போன்று மிரட்டல்கள் விடுகின்றார்கள் இதனால்
இவ்வாறான போராட்டங்களுக்கு வருவதற்கு மக்கள் பயப்படுகின்றார்கள்." என தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.