முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
முல்லைத்தீவில் முழு மாவட்டத்திற்குமான நோயாளிகளின் விசேட வைத்திய நிபுணர் சேவையை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை மட்டுமே வழங்கி வருகின்றது.
பொது மருத்துவம்,சத்திரசிகிச்சை,குழந்தை மருத்துவம்,பெண்ணியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய ஒவ்வொரு விசேட துறையிலும் இரண்டு நிரப்பிடம் காணப்படுகின்றன.
மாவட்ட மருத்துவமனையில் இறுதியாக சேவையில் இருந்த ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் ஒரு மாதத்திற்கு முன்பாக மேலதிக கற்கை நெறிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அன்றில் இருந்து இன்றுவரை வேறு ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் பிரதியீடு செய்யப்படவில்லை.
கடந்த இரு வாரங்களாக வடமாகாணத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சத்திர சிகிச்சை நிபுணரை பெற்றுக்கொள்வதற்காக இடர்பாடுகளை சந்தித்து வருகின்றார்கள். மற்றும் என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் மனநல மருத்துவ நிபுணர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையாக காணப்பட்டபோதும் மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்றபோது குறைந்தளவான விசேட வைத்திய நிபுணர்களே நியமிக்கப்படுகின்றார்கள்.
தற்போதைய நிலையில் விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையினால் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு இடம்மாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதன்போது இரண்டு மணிநேரங்கள் பயணம் செய்யவேண்டி காணப்படுகின்றது . இது நோயாளி சிறந்த சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு காலதாமதமாவதுடன் நோயாளியின் உயிரினை ஆபத்திற்கும் உள்ளாக்குகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறாளமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் போக்குவரத்து வசதியின்மையால் தமது தொடர்ச்சியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் நிறுத்திக்கொள்கின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பாக அரச மருத்துவர் சங்க முல்லைத்தீவு கிளை ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,மாகாண சுகாதாரசேவைகள் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு பல தடவைகள் அறிவித்தபோதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
தற்போது மாவட்ட பொது மருத்துவமனையில் நியமிக்கப்பட வேண்டிய வைத்தியர்களின் எண்ணிக்கை 70 ஆக காணப்படுகின்ற போதும் 35 வைத்தியளர்களே பணியாற்றுகின்றார்கள். இவ்வாறு காணப்படுகின்ற போதும் இந்த தொற்று நோய்க்காலத்தில் இயன்றளவு சிறந்த சேவையை வழங்கி வருகின்றார்கள்.
அத்தோடு அமைச்சரவை சுற்றறிக்கையில் கோவிட் 19 காலத்திற்கான மேலதிக கொடுப்பனவுகள் அங்கீகரிக்கப்பட்ட போதும் கடந்த சில மாதங்களுக்கான கொடுப்பனவுகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் அடையாள பணிப்பகிஸ்கரிப்பிற்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே நோயாளிகளின் உயிர்களை நிர்கதிக்குள்ளாக்காமல் இப்பிரச்சினை அனைத்துக்குமான தீர்வுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.