போர்காலத்தினை விட மிகவும் மோசமான தாக்கம் - வைத்தியர்கள், ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அரச ஊழியர்கள் மருத்துவமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இக் கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்று (05) முன்னெடுக்கப்பட்டது.
அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
ஊழியர்களின் போராட்டத்தினை தொடர்ந்து வைத்தியர்களும் மருத்துவமனைக்கு முன்வந்து “ஜனாதிபதி வீட்டுக்கு செல்” என்ற கோசங்களை எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
“அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைத்து கட்டுப்பாட்டு விலையை நிலை நிறுத்து”,“ அடிக்கும் வெய்யிலில் நீண்ட வரிசை ஏற்படுத்தி மனிதர்களை கொல்லாதே”,”தினமும் நீண்டவரிசையை ஏற்படுத்தி இறப்பை ஏற்படுத்தாதே”, ”எரிபொருள் விலையினை குறைத்து போதியளவு கிடைக்க செய்”, ”மின்சாரத்தை வெட்டாதே இருட்டு வாழ்வை வெளிச்சப்படுத்து”போன்ற வாசங்கங்கள் தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றுதான் பெட்றோல் அடிக்க வேண்டியதாக உள்ளது, சதோசா விற்பனை நிலையம் அருகில் இருந்தும் வரிசையில் நின்று தான் பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பால்மா பொருட்களுக்கு சரியான தட்டுப்பாடு நிலவிக்கொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் நிரந்தர விலையினை நிர்ணயித்து வழங்க வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது பசளை இல்லை, அரிசி இல்லை, எரிபொருள் இல்லை, போர்காலத்தினை விட மிகவும் மோசமான தாக்கமாக காணப்படுகின்றது.
நாட்டில் பொருளாதார தடை மேலோங்கி உள்ளது. எங்கள் பிள்ளைகளை பாடசாலை அனுப்ப முடியாத நிலை நீண்ட தூரத்தில் இருந்து வைத்தியசாலைக்கு வரும் நாங்கள் சமைத்துவிட்டு வருவதற்கு எரிவாயு தட்டுப்பாடாக இருக்கின்றது. பாமர மக்கள் நிறைந்த நாட்டில் அனைத்து வகையான பொருட்களுக்கும் விலைவாசி கூடிக்கொண்டு செல்கின்றது இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும் என்று வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.