முல்லைத்தீவின் அபிவிருத்திக்கு தடை இரண்டு தமிழ்கட்சிகளே: உபதவிசாளர் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாவட்டம், இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு காரணம் இங்குள்ள இரண்டு கட்சிகள் தான் என கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்துள்ளார்.
உபதவிசாளர் அரச அதிகாரியினை அச்சுறுத்தியாக வெளியான செய்தி தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனது வட்டாரத்தில் வீதி அபிவிருத்தி செய்வதற்காக யே.சி.பி இயந்திரத்தினை கடந்த ஞாயிற்றுகிழமை தொடக்கம் பிரதேச சபை செயலாளரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரையில் எனக்கு அந்த இயந்திரம் கொடுக்கப்படவில்லை.
எனது கிராம மக்கள் என்னை வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும், மின்விளக்கு பொருத்தவேண்டும் என அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே பிரதேச சபைக்கு அனுப்பினார்கள்.

பிரதேச சபை இயந்திரம் வழங்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி வேலையினை செய்யாமல் விடவில்லை. நான் அந்த இடத்தில் வேறு இயந்திரம் ஒன்றினை வைத்து, வீதி அபிவிருத்தி பணியினை முன்னெடுக்க முயற்சி செய்தேன்.
இந்த நிலையில், நான் வீதி அபிவிருத்தி வேலைசெய்யும் இடத்திற்கு குறித்த அதிகாரி. உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு வந்து மறிக்க வந்துள்ளார். அந்த இடத்தில் நான் அவருடன் நீங்கள் கனரக இயந்திரம் தரவில்லை செய்யும் எங்களை என்றாலும் விடுங்கள் என்று கூறினேன்.
அதற்காக அதிகாரியை அடிக்கவோ கொலை அச்சுறுத்தலோ நான் விடவில்லை. இதுதான் உண்மைச் சம்பவம்.
எனது மக்களுக்கான அபிவிருத்தி முயற்சியினை தடைசெய்யும் நோக்குடன் தான் குறித்த அரச அதிகாரி நடந்துகொண்டார். பிரதேச செயலத்தினால் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் வீதிக்கு வடிகால்(கான்) வெட்டுவதற்காகவே பிரதேச சபையிடம் கனரக இயந்திரத்தினை கேட்டிருந்தேன்.
அவதூறாக பேச இதுதான் காரணம்
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளமை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் நாங்கள் மக்களின் அபிவிருத்திக்காக வந்தோம். அநுர தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், எங்கள் கிராமத்திற்கும் அபிவிருத்தி செய்வார் என்ற நம்பிக்கையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை நாங்கள் கொடுத்துள்ளோம். இங்குள் இரண்டு தமிழ்கட்சிகளும் தங்கள் கட்சியினை வளர்ப்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்சியும் அவர்களும் அவர்களின் வளர்ச்சியும் தான் நோக்கம்.
முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு இந்த இரண்டு கட்சிகள் தான் காரணம். தன்னையும் கட்சியையும் வளர்த்துக் கொண்டு, மக்களை ஏமாற்றியது தான் மிகுதியாக உள்ளது.
இவ்வாறான கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், இங்கு நடக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கிறார்.
எமது பிரதேசத்தினை பல மடங்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்வதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசாங்கத்திடம் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆறு வீதிகள் வந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றியவுடன் நடந்த சம்பவம் இது" என குறிப்பிட்டுள்ளார்.