முல்லைத்தீவில் நடைபெற்ற தெங்கு பயிர்ச்செய்கை விழிப்புணர்வு கருத்தரங்கு
முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளத்தில் தெங்கு பயிற்செய்கை தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
தென்னை பயிர்ச்செய்கையாளர்களிடையே தென்னை பயிர்ச்செய்கை தொடர்பில் போதியளவு அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உடுப்புக்குளத்தில் உள்ள பொன்றோ தனியார் நிறுவனத்தின் முயற்சியினால் அதன் பிரதம நிறைவேற்றுநர் மைக்கன்றோவின் வழிகாட்டல் மற்றும் அனுசரணையுடன் 120 பயனாளிகளுக்கு தெளிவூட்டல் கருத்தரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துறைசார் அறிஞர்களின் பங்கெடுப்புடன் இது முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உடுப்புக்குளம் கிராமத்தில் தென்னை உற்பத்தியினை மேற்கொள்ளும் 120 பயிர் செய்கையாளர்களுக்கு றேனுகா அக்ரி டிசி (RENUGA Agri Food DC) நிறுவனத்தின் வளவாளர்களின் பங்கேற்புடன் தென்னை பயிற்செய்கை தொடர்பான விழிப்புணர்வு கருத்தூட்டல்கள் வழங்கப்பட்டிருந்தது.
ஊக்குவிப்பு பொதிகள்
உடுப்புக்குளத்தில் உள்ள பொன்றோ நிறுவனத்தின் தேங்காய் விற்பனை வளாகத்தில் ஏற்பாடாகி இருந்த தெங்கு பயிர்ச்செய்கை விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த பயனாளியொருவர் குறிப்பிடும் போது ஊக்குவிப்பு பொதிகளின் வழங்கலானது மக்களை ஆர்வத்துடன் பங்கெடுத்து பயனடைய உதவியிருந்தது.
சிறந்த ஒரு முயற்சியை பொன்றோ நிறுவனம் செய்திருப்பது பாராட்டத்தக்கது.காலத்தின் தேவையினை புரிந்து செயற்படும் இது போன்ற தன்னார்வலர்களின் செயற்பாடு சவால்மிக்க இன்றைய சூழலில் வாழும் மக்களுக்கு அதிக பயனுடையதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆரோக்கியமான முயற்சி
இந்த முயற்சியினால் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பில் மேலதிக அறிவை பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது.
தெங்குற்பத்தியின் மூலம் சுய பொருளாதார முன்னேற்றத்தினை அடைவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது என நிகழ்வில் பங்கேற்றிருந்த சிலருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இது போல் வருடத்தில் ஒரு முறையாவது தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுடன் துறைசார் நிபுணர்கள் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள இலகுவாக இருக்கும் என அவ்வூர் சமூக ஆர்வலர் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |