முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு: அதிகாரிகள் மேற்கொண்ட களவிஜயம்!
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், அக்கரைவெளி, மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று (29) நேரடிக் களவிஜயம் இடம்பெற்றது.
கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனின் ஏற்பாட்டில் களவிஜயம் இடம்பெற்றது.
குறித்த கள விஜயத்தின் போது பிரதானமாக அக்கரைவெளி மாரியா முனைக்கு செல்லும் 16 KM வீதி முற்றுமுழுதாக பழுதடைந்தும் சில இடங்களில் வீதியற்ற நிலையிலும் காணப்படுகின்றது.
அறுவடை நெல்
இங்கு உலத்துவெளி, எரிந்தகாடு, நாயடிச்ச முறிப்பு, பெரியவெளி, அக்கரைவெளி, மாரியாமுனை ஆகிய இடங்களில் 1800 ஏக்கர் வயல்நிலம் பயிர்செய்யப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 600 விவசாயிகள் தங்கள் அறுவடை நெல்லை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்ப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இவற்றைக் கருத்தில் கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் வடமாகாண ஆளுநரிடம் விடயத்தினை முன்கொண்டு சென்று வீதி புனரமைப்பின் முக்கியத்துவத்தினை முன்மொழிந்தார்.
இதன் பிரகாரம் வடமாகாண ஆளுநர், துறைசார்ந்த அதிகாரிகள், குறித்த பகுதி விவசாயிகள் முதலானோருடன் வீதி புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 2025 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்திலும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்திலும் குறித்த வீதியானது முக்கியத்துவத்தின் அடிப்படையில் கட்டம் கட்டமாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநரால் உறுதியளிக்கப்பட்டது. இதற்கான மீள் கள ஆய்வாக நேற்று குறித்த கள விஜயம் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், துறைசார்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி விவசாயிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.













