நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos)
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
[
அத்துடன், பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவம் இன்று (06) இரவு 07.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துவிச்சக்கர வண்டியில் பரந்தன் நோக்கி பயணித்த முதியவர் ஒருவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் முதியவரை மோதித் தள்ளி விட்டு படுகாயம் அடைந்த முதியவரை அவ்விடத்தில் விட்டு தப்பி ஓட முற்பட்ட சமயம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அவர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் குறித்த விபத்தினை மூடி மறைக்க முற்பட்ட சமயம் பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது எனவும் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த முதியவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப தேவைக்கான பொருட்களுடன் இரண்டு துவிச்சக்கரவண்டியில் தனித்தனியாக பயணித்துக்கொண்டிருந்த யுவதிகள் மீது, பின்னால் பயணித்த ரிப்பர் மோதியுள்ளது.
இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த பாடசாலை கல்வியை தொடரும் இரு யுவதிகள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவித்து, அதே சாரதியைக் கொண்டு வாகனத்தை எடுக்க முற்பட்ட போது கூடியிருந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உயரதிகாரி, குற்ற செயல் தொடர்பில் நீதியான விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்ததுடன், பிரிதொரு சாரதி ஒருவரின் உதவியுடன் வாகினத்தில் விபத்துடன் தொடர்புடைய சாரதியையும், ரிப்பர் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.