அர்ச்சுனா எம்பியால் தமிழ் மக்களுக்கு அவமானம்..! சபையில் முஜிபுர் ரஹ்மான் ஆதங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanadan Archuna) வெளியிட்ட சில கருத்துக்கள், அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர்," இராமநாதன் அர்ச்சுனா இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுபிள்ளைகள் விவாகம் அதிகமாக முஸ்லிம் சமூகத்திலேயே இடம்பெறுவதாக குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அர்ச்சுனாவின் கருத்து
இந்த கருத்தில் அவர், நாட்டில் ஒரு சட்டம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அந்தவகையில் 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களத்தினால், வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கையின் படி, 17 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் விவாகம், எல்லா சமூகத்திலும் நடந்திருக்கின்றது.
அதாவது, பெரும்பான்மையினத்தில், 69 வீதமும், தமிழர்கள் மத்தியில் 13 வீதமும், மலையக மக்கள் மத்தியில் 8 வீதம் மற்றும் முஸ்லிம் சமூகத்தில், 14 வீதம் என எல்லா சமூகத்திலும் இந்த சிறுபிள்ளைகள் விவாகங்கள் நடந்திருக்கின்றன.
எனவே, இது ஒரு பொதுப்பிரச்சினை, ஆகையால் அதை பற்றி பேசாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவது என்பது அதன் பின்னணியில் வேறு திட்டங்கள் இருப்பது போல் காட்டுகின்றது.
அத்துடன், முஸ்லிம் சமூகத்தின் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஒரு அரசியல் காரணத்தினாலோ என எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது.
அது மாத்திரமன்றி, அர்ச்சுனா தனது உரையில் இந்நாட்டில் ஒரு சட்டம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். பல இனங்கள் வாழும் இந்நாட்டில் பல சட்டங்கள் இருக்கின்றன. அவை அனைத்து மக்களுக்கும் தேவையானவையே.
தமிழ் மக்களுக்கு அவமானம்...
இந்நிலையில், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத இவ்வளவு காலத்தில் அண்மைய காலமாக அர்ச்சுனா எம்பி அதனை எதிர்க்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
அத்துடன், ஒரு சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு அவர் இன்னொரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசுவது மிகக் கவலைக்குரிய ஒரு விடயம்.
மேலும், நாடாளுமன்றத்தில் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் யாரும் பிற இனத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைப்பதில்லை.
இந்நிலையில், ஒரு சிறுபான்மை சமூகத்தவராக இருந்து கொண்டு இன்னொரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசுவது, அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற அவமானம் என நான் நினைக்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
