பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மொத்த உற்பத்தியில் பின்னடைவை சந்தித்த நாடாக பிரித்தானியா உள்ளது. இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஊதியத்தில் 2,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பெற உள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம்
இந்த ஊதிய உயர்வானது, நடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தில் 2.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, இனி ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 84,144 பவுண்டுகள் முதல் 86,584 பவுண்டுகள் வரையில் ஊதியமாக பெற உள்ளனர்.
சமீப வாரங்களாக ஊதிய உயர்வு கோரி NHS ஊழியர்கள், தொடருந்து, கல்வி மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் Ipsa நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து உறுதி செய்துள்ளதுடன், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த ஊதிய உயர்வானது கடந்த ஆண்டு பொதுத்துறை ஊழியர்களின் சராசரி ஊதிய உயர்வுக்கு சமமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
பொது மக்களின் நிலை
கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில், இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஊதிய உயர்வானது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பின்னடைவு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிப்பதை பிரித்தானியாவின் நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 4.3 புள்ளி மக்களின் வாழ்க்கை தரம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.