மட்டக்களப்பில் வாகன விபத்து - மூவர் படுகாயம்
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று காலை 9.20 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எருவில் கோடைமேடு கிராமத்தைச் சேர்ந்த இருவர் தமது மோட்டார்சைக்கிளில் மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனைக்கு பயணித்துக் கொண்டிருக்கையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தின் உள்வீதியாக வந்த 60 வயதுடைய தாயொருவர் பாதையைக் கவனிக்காமல் கடப்பதற்கு முற்படுகையில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதசாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 50 மீற்றருக்குள் பாதசாரி கடவை இருந்தும் குறித்த வயோதிபத்தாய் பாதசாரி கடவையைப் பொருட்படுத்தாமல் வீதியைக் கடப்பதற்கு முற்பட்டு விபத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் 60 வயதுடைய வயோதிபத்தாய் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29, 53வயதுடைய இருவருமாக 3பேரும் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இவ்விபத்தினால் மோட்டார்சைக்கிளின் முன்பகுதி பாரிய சேதமேற்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.






