பிரித்தானிய பிரதமரின் தாயார் காலமானார்!
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் சார்லோட் ஜோன்சன் வால் தனது 79 வயதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனின் செயின்ட் மேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திங்களன்று அவர் அமைதியான முறையில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும் சார்லோட் ஜோன்சன் 40 வயது முதல் பல தசாப்த காலமாக பார்கின்சன் நோயுடன் போராடி வந்துள்ளார்.
1942 ஆம் ஆண்டு பிறந்த சார்லோட் ஜோன்சன் 1970 களில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். அவர் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு 1963 இல் ஸ்டான்லி ஜோன்சனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடியினர் 1979 இல் விவாகரத்து செய்தனர். போரிஸ் ஜோன்சன், பத்திரிகையாளர் ரேச்சல், முன்னாள் அமைச்சர் ஜோ மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லியோ ஆகிய நான்கு பிள்ளைகளின் பெற்றோர் இவர்கள் ஆவர்.
1988 இல் சார்லோட் ஜோன்சன், அமெரிக்க வரலாற்றாசிரியர் நிக்கோலஸ் வால் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். எனினும் அவர் 1996 ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்தார்.