நாட்டை விட்டு வெளியேறிய 500க்கும் மேற்பட்ட வங்கி முகாமையாளர்கள்
இலங்கையின் முன்னணி தனியார் வங்கி ஒன்றின் 500க்கும் மேற்பட்ட உயர் மட்ட முகாமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறியுள்ள 470 மருத்துவர்கள்
அதேபோல் 470 மருத்துவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கி ஊழியர்கள் இவ்வாறு நாட்டை விட்டுச் சென்றுள்ளதால், வங்கி கட்டமைப்பை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் வைத்தியசாலை கட்டமைப்பை கொண்டு நடத்துவதிலும் நெருக்கடி உருவாகியுள்ளது. மருத்துவர்களின் கவலை நியாயமானது. சம்பளத்தின் அடிப்படையில் வரி அறவிடுவது பொருத்தற்றது என கருத்து வெளியாகியுள்ளது.
இதற்கு காரணமானவர்கள் வெளியில் இருக்கின்றனர். நாட்டின் தொழில் ரீதியான வளம் நாட்டில் இருந்து வெளியேற காரணமாக வரி அறவிடும் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையா?-கைத்தொழில் துறையினர் அச்சத்தில்
இலங்கை மின்சார சபைக்கு நிதி நெருக்கடி இருக்கலாம். மின் கட்டணம், வரி, வட்டி அதிகரிப்பு காரணமாக தொழில் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனை கவனத்தில் கொண்டு சில சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதா?. கைத்தொழில் துறையினர் இது குறித்து அச்சமடைந்துள்ளனர். உடன்படிக்கையை கைச்சாத்திடும் முன்னர் எங்களுடன் இந்த சபையில் பேசுங்கள்.
அந்த உடன்படிக்கையின் தற்போதைய நிலைமை குறித்து அறிய விரும்புகிறோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.