வவுனிக்குளம் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையினால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு - அம்பாள்புரம்,வவுனிக்குளம் வீதியூடாக போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாமையினால் அந்த பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பாலிநகர் சந்தியிலிருந்து கொல்லவிளாங்குளம் அம்பாள்புரம் ஆறாம்கட்டை ஆகிய கிராமங்களுடாக வன்னிவிளாங்குளம் சந்தி வரைச் செல்லும் பிரதான வீதியானது கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டமையால் இதனூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள பாடசாலை தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்குவதனால் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து அல்லது 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம், மாங்குளம், மல்லாவி ஆகிய பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது.
எனவே,மல்லாவியிலிருந்து மாங்குளம் ஊடாக செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும், மாங்குளத்திலிருந்து மல்லாவி செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும் இவ்வீதியூடாக மேற்கொள்ளுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இதனூடான பேருந்து சேவையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கி வைத்த போதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
