காணாமல் போனோர் அலுவலகத்தில் 20000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் - வழக்குகளின் விசாரணைகள் நிறைவு
யாழ்ப்பாணம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(23.08.2026) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
31 பேர் கண்டுபிடிப்பு
மேலும் தெரிவிக்கையில், பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2,000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும், விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800 பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 7,726 பேருக்கு அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும், மட்டக்களப்பில் 3 பேரும், கம்பஹாவில் 2 பேரும், திருகோணமலையில் ஒருவரும், அனுராதபுரத்தில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி — 584 மனித எச்சங்கள்
எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என அலுவலகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்தி, அவற்றை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்