விகாரமாதேவி பூங்கா போராட்டம்: துறவிகளின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த துறவிகள் தாக்கல் செய்த மனுவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று(23) நிராகரித்தார்.
போராட்டக்காரர்களை பூங்காவிலிருந்து வெளியேறுமாறு நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அல்லது மாற்றியமைக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சத்தியாக்கிரக போராட்டம்
எனினும்,நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்றக் கட்டளையை திரும்பப் பெறவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக கைது பிடியாணையை (Arrest Warrants) பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட தனிக் கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டால், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தேவையான பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் அறிவித்தது.
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பௌத்த பிக்குகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.