லங்கா சதொச நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்! எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை
லங்கா சதொச நிறுவனத்திற்கு 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 1500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் அறுபது கோடி ரூபா எனவும் கோப் குழு தெரிவித்துள்ளது.
2014-2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவகத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக 6 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
மேலும், மனித பாவனைக்காக கொண்டு வரப்பட்டு கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் கையிருப்பு காலாவதியானதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டங்கள்
இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட கோப் குழு தீர்மானித்துள்ளதுடன், லங்கா சதொச நிறுவனத்திற்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கூட்டத்திற்கு லங்கா சதொச லிமிடெட் நிறுவனம் அழைக்கப்பட்ட போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், குறித்த நிறுவனத்தில் 1123 பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முன்னர், அதனை மீள் மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஆகஸ்ட் 22ஆம் திகதி லங்கா சதொச நிறுவனத்தை மீள அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |