ஈழவாணியின் முக்குத்திப்பூ: ஈழத்துச் சினிமாவில் திறக்கப்படும் ஒரு புதிய பக்கம்
ஈழச்சினிமா என்ற புத்தகத்தில் திறக்கப்பட்ட புதிய பக்கமாக ஈழவாணியின் மூக்குத்திப்பூ திரைப்படத்தின் வருகை இருக்கின்றது.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டிருந்த ஈழத்தின் இன்றைய துயரை நாசுக்காக சொல்ல முனைந்த மூக்குத்திப்பூ திரைப்படத்தின் கதைக்கரு, ஒன்றுக்கு மேற்பட்ட கதைக்களங்களூடாக நகர்த்தப்படுகின்றது.
ஈழச்சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் செயலாழுமையின் வெளிப்பாடாகவும் மூக்குத்திப்பூவை நோக்க முடியும்.
மூக்குத்திப்பூ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்.ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது.
இதன்போது, ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள், திரைப்படத்துறை சார்ந்தோர் என குழுமியிருந்ததோடு படத்தில் நடிப்பு மற்றும் ஏனைய துறைகளில் பங்கெடுத்திருந்தவர்களும் இணைந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
ஆரம்ப நிகழ்வுகள்
படத்தின் இயக்குநர் ஈழவாணியும் படத்தின் முதலீட்டாளர்கள் என்ற நோக்கில் இன்னும் பலரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றை பயன்படுத்திய வரவேற்பு நடனத்தினை இளைஞர்கள் குழு ஒன்று முன்னெடுக்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மேலும், இயக்குநர் ஈழவாணியின் விளக்கவுரையினைத் தொடர்ந்து கேக் வெட்டி நிகழ்வின் ஆரம்பம் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்திருந்தது.
பாரம்பரிய இசைக்கருவி பயன்பட்ட வரவேற்பு நடனம் மனதைக் கவர்ந்த முன்மாதிரியான ஒரு செயற்பாடாக அமைவதாக சமூக விட ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஈழத்தில் இருந்து ஈழத்து நடிகர்களின் நடிப்பில் பெண் இயக்குநரின் நெறியாளுகையில் உருவான மூக்குத்திப்பூவின் ஆரம்ப நிகழ்வுகளை அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புக் காட்சியினை பார்வையிட வந்திருந்த மூத்த கலைஞர்கள் பலர் மெச்சியிருந்தனர்.
பெண் இயக்குநர்
ஈழத்தின் சமகாலத்தில் வெளிப்படுத்தல்களோடு இயங்கி வரும் இயக்குநராக ஈழவாணியை அடையாளப்படுத்துகின்றனர் ஈழத்துச் சினிமா ஆர்வலர்கள்.
முதலீட்டாளர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நடிகர் நடிகைகளின் ஒத்திசைவு, கதைக்களத்தோடு இசைந்து போகும் நடிப்புக்கான நெறியாளுகை என ஒரு பெண் ஆளுகையின் வெளிப்பாடுகளை மூக்குத்திபூ மூலம் ஈழவாணி பதிவு செய்துள்ளார் .
பெண்களும் சுதந்திரமடையும் போது தான் ஒரு நாடு முழுமையாக சுதந்திரம் பெற்றுக்கொண்டதாக கருத முடியும் என ஈழச்சான்றோர் குறிப்பிடுவதும் அதன் ஒரு கூறாக ஈழவாணி போன்ற ஈழச்சினிமாவில் பெண் ஆளுமைகளின் வருகையும் அவர்களின் செயலாளுமைகளின் வெளிப்பாடுகளும் ஈழச்சினிமா துறையில் ஒரு விடிவெள்ளியைப் போல் இருப்பதாக எண்ணிவிட முடியும்.
இது போன்ற வரவுகளும் அந்த வரவுகளால் கிடைக்கும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களைப் பேசும் வெற்றிப் படங்களும் ஈழச்சினிமாவின் நாளைய பொழுதினை ஒளி நிறைந்ததாக மாற்றி விடும் என்பது திண்ணம்.
கதைக்களத்தின் போக்கு
ஒற்றைக்கதையினை கொண்டு செல்லும் சினிமா பாணியில் இருந்து வேறுபட்ட மாதிரியாகவே ஈழசாசினிமாவின் அண்மைக்கால வரவுகள் இருக்கின்றன.
ஈழ வாணியின் மூக்குத்திப்பூவும் பல கதைக்களங்கள் ஊடாக கதை பேசிச் சென்று ஈற்றில் அத்தனை கதைக்களங்களையும் ஒன்றிணைத்து விடும் காட்சியமைப்பொன்றோடு படம் முடிவடைவதாக இருக்கின்றது.
வெளிநாட்டு வாழ்க்கையில் தன் வீட்டுக்காகவும் உறவுகளுக்காகவும் உழைத்து தனது இளமையைத் தொலைத்து விட்டு தனக்காக வாழ முயலும் ஒருவரின் உணர்வுகளை கண் முன் கொண்டுவந்து காட்டி விடுகின்றார்.
நல்ல மனம் படைத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் சமூக யதார்த்தம் கதைக்களத்தில் நூலோடிப்போயிருப்பதையும் உணரமுடியும்.
முன்னாள் போராளிகளுக்கான உதவிகளை வழங்குவதால் அவர்கள் வாழ்வின் ஏற்படும் வசந்தம் மற்றும் அவ்வாறான உதவிகளை தட்டிப் பறிக்க முயலும் சூழலும் தாயகத்தில் இருப்பதையும் எடுத்துரைக்க முயன்றிருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வாழ்வைத் தொலைத்த பலரின் வாழ்வும் அவர்களை இந்த சமூகம் கையாளும் முறைகளையும் மூக்குத்திப்பூ பேசிச் செல்கின்றதையும் அவதானிக்கலாம்.
யாழில் அதிகமாக நடைமுறையில் உள்ள அச்சமூட்டும் வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் ஏமாற்றுப் பேர் வழிகளின் செயற்பாடுகள் என மூக்குத்திப்பூ பல கதைக்களங்களை தனதாக்கி பயணிக்கின்றது.
காலத்தின் கண்ணாடியாக இலக்கியப் படைப்புக்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தியலை பிரதிபலிப்பதாக ஊழியும் அதனைத்தொடர்ந்து வந்திருந்த மூக்குத்திப்பூவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இரு திரைப்படங்களும் ஈழத்தின் இன்றைய துயரங்களை எடுத்தியம்புவதாக இருந்தன என்பதும் தாயகத்தினையும் புலத்தினையும் ஏதோவொரு வகையில் இணைத்து நிற்கின்றன என்பதும் பாராட்டுக்குரியதே!
ஈழச்சினிமா திரைப்படம்
சமூக விழிப்பை பேசும் கதைக்களங்கள் பற்றி ஈழச்சினிமாவினர் கருத்தில் எடுத்து செயற்படுவதால் ஆரோக்கியமான மாற்றங்களை தாயகத்தில் ஏற்படுத்த முடியும் என சமூக நலன் மீது அக்கறையுடைய கல்விச் சமூகத்தினர் சிலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
மூக்குத்திப்பூ எல்லோரும் பார்க்க வேண்டிய, பார்க்கக் கூடிய ஈழச்சினிமா திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
படத்தின் போக்கில் பின்னணி இசையில் கதையோடு பொருந்திப் போகும் அளவில் இன்னும் கூடிய கவனம் எடுத்திருக்கலாம்.
அப்படி கதைக்களத்தோடு நெருக்கமான பின்னணி இசை இருந்திருக்கும் போது பார்வையாளர்களின் மனதை நெருடும் பல காட்சிகள் இன்னும் உயிர்ப்போடு வெளிப்பட்டிருக்கும் என்பதும் நோக்கத்தக்கது.
சில காட்சிகளின் அமைப்பில் அவற்றின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பதோடு இன்னும் சில காட்சிகளில் பாத்திரங்களின் தோற்றத்தை கதைக்களத்தோடு பொருத்தி கொண்டு செல்வதில் கவனக்குறைவினை விட்டிருக்கிறார் எனவும் துறைசார்ந்த ஒருவர் மூக்குத்திபூ தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
கதைக்களங்களில் மாற்றம் வருமா?
ஈழச்சினிமாவில் வேகமான பாய்ச்சல் ஒன்றுக்காக கதைக்களங்களை கொஞ்சம் மாற்றி அமைக்க முயல வேண்டும்.
ஈழம் பற்றிய எல்லா கதைக்களங்களும் ஈழ மக்களை பரிதாபத்திற்குரியவர்களாக காட்டவே இயக்குநர்களும் கதாசிரியர்களும் முயல்கின்றனர்.
ஈழத்தின் தாயகத்தில் வாழும் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாகவும் உதவிக்கு காத்திருப்பவர்களாகவும் கதைக்களங்களை அமைப்பதில் இருந்து மாற்றங்களைக் காண வேண்டும்.
தாயகத்தில் உள்ள முயற்சியாளர்கள் மற்றும் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்தியம்பலாம். இலங்கை அரசின் முட்டாள்தனமான போக்கு ஈழத்தவர்களின் ஆற்றல்களை மழுங்கடிப்பதை சுட்டிக்காட்டலாம்.
ஒரு திரைப்படத்தில் ஒரு பிரதான கதையின் தொடர்ச்சியோடு துணைக்கதைகளை நகர்த்திச் செல்ல முயற்சிக்கும் போது படங்கள் சார்ந்து ஈர்க்கப்படும் ரசிகர்களின் அளவினை அதிகரிக்க முயற்சிக்கலாம்.
சமூக மற்றும் போராட்ட களங்களை மையமாக கொண்ட பல கதைகள் ஈழதேசத்தில் பரவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் ஈழச்சினிமாவின் படங்கள் புதிய பிரதான கதைக்களங்களோடு பயணிக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |