நரேந்திர மோடியின் நிகழ்வுகள்:செய்தி சேகரிப்பில் இருந்து தடுக்கப்பட்ட இலங்கை ஊடகங்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை செய்தியாக சேகரிப்பதற்கு இலங்கை ஊடகங்களை அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடக தரப்புகள்
அந்த வகையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, உள்ளூர் செய்தியாளர்களுடன் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மோசமாகத் தவறிவிட்டது என்று ஊடகத் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்திய உயர் ஸ்தானிகரகம், இந்திய ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்த நிலையில், அவர்களில் பலர் தங்கள் பிரதமருடன் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இலங்கை ஊடகங்களுக்கு, சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சம்பிரதாய வரவேற்பு நிகழ்வில் மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அநுரகுமார திசாநாயக்கவின் உரை
இரண்டு தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்ட நிகழ்வில், இலங்கை ஊடகங்களிலிருந்து அரசு தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' மட்டுமே அனுமதிக்கப்பட்டது, ஆனால் முழு இந்திய ஊடகவியலாளர்களும் உள்ளே அழைக்கப்பட்டனர்.
இதேவேளை இந்திய பிரதமரின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும், உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக இலங்கை ஊடகவியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
எனினும்,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உரை, ஐந்து மணி நேரத்திற்கு பின்னரே இலங்கையின் செய்தி அறைகளுக்கு சென்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.