அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள் - என்.பிரதீபன்
நாட்டின் சொத்துக்களையும், இறைமையையும் தாரைவார்க்கும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்கிசலெனினிச கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்,
கோட்டாபய, மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மைக்காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது.
உணவுப்பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியான விலை அதிகரிப்பு நாட்டு மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டிவதைத்து வருகின்றது.
அத்துடன் நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் உரப்பிரச்சனைக்கு உரியமாற்று தீர்வுகளைக் காணாமல், பசளையை நிறுத்தியது விவசாயிகளின் தலையில் கல்லைப்போட்டுக் கொல்வதற்குச் சமமானது.
அத்துடன் கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலமானது உயர் கல்வித்துறை இராணுவமயமாக்கப்படும் அபாய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டின் சொத்துக்களையும் இறைமையும் தாரைவார்க்கும் அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸ் அராயகத்தை கட்டவிழ்த்துக் கைது செய்து தனிமைப்படுத்தும் எதேச்சியதிகாரமான செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
இவற்றை முன்னிறுத்து அரசின் இத்தகைய செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்தை வலுப்படுத்துமாறு புதிய ஜனநாயக மாக்கிசலெனினிச கட்சியின் வன்னி மாவட்ட கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அரசியல் ஜனநாயக உரிமையில் கோட்டா, மகிந்த அரசு கைவைப்பதினை கண்டிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டத்தில் இன மத மொழி பேதம் கடந்து அனைத்து அமைப்புக்களையும் கலந்துகொள்ளுமாறு கட்சி அழைத்து நிற்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.




