காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல..!
வட மாகாணத்தைப் பொறுத்தவரை, 'காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல.
இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் நேற்று (07.05.2026) மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட அதிதியாக உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ; கட்டுலந்த அவர்கள் 'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டு வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நிகழ்வுக்கு அனுப்பி வைத்திருந்த விசேட செய்தி உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.



